மன்னாரில் கடைத் தொகுதியில் தீ விபத்து: இரு கடைகள் முற்றாக எரிந்து

பதிவிட்டவர் - Editor

  மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த கடைத்தொகுதியில் உள்ள இரு கடைகள் முற்றக எரிந்துள்ளன.

குறித்த கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு பின் திடீர் என தீப்பற்றி எரிந்தது.

குறித்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியதோடு, பேசாலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் தீயை அனைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த தீ விபத்தின் காரணமாக குறித்த கடை தொகுதியில் அமைந்துள்ள இரு கடைகள் முற்றாக தீயில் எரிந்துள்ள நிலையில் ஏனைய மூன்று கடைகள் தீயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.உணவகம் மற்றும் மின் உபகரணம் திருத்தும் நிலையம் ஆகிய இரு கடைகளே எரிந்து நாசமாகியுள்ளது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் எருக்கலம் பிட்டி சந்தியில் இருந்து தலைமன்னார் வரையான தொலைத் தொடர்பு சேவைகள் பாதீப்படைந்துள்ளது.

-குறித்த கடைகள் திட்டதிட்டு தீ வைக்கப்பட்டா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.