இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி

பதிவிட்டவர் - Editor
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி

வெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில்  நியுசிலாந்து அணி  வெற்றி பெற்றது.

கடந்த 21-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு களமிறங்கிய நியுசிலாந்து அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணி 348 ரன்கள் எடுத்திருந்த போது ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மீண்டும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஓரளவு தாக்குப்பிடித்த மயங்க் அகர்வால் மட்டுமே அரைசதம் கடந்து, அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, நியூசிலாந்து அணி தரப்பில் சவூதி 5 விக்கெட்டுக்களையும், போல்ட் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், 1 புள்ளி 4 ஓவரில் எளிதாக இலக்கை எட்டினர். இப்போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட, டிம் சவூதி ஆட்டநாயகன் விருது பெற்றார்