மருத்துவ வல்லுநர்களின் கருத்தை அறிந்தே பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றி முடிவு – கல்வி அமைச்சர்

நவம்பர் 23ஆம் திகதி 3ஆவது தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்கலாமா வேண்டாமா? என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்கு பங்களித்த அனைவருக்கும் கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுடன் பேசிய பேராசிரியர் பெரேரா, “பரீட்சைக்கு விண்ணப்பித்த 3 லட்சத்து 31 ஆயிரத்து 741 மாணவர்களில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 264 மாணவர்கள் ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பரீட்சை ஆணையாளரின் அறிக்கையின் படி பத்து மாணவர்கள் முழுமையான புள்ளிகளை (200/200) பெற்றுள்ளனர்.
மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு தகுதி பெறுவார்கள். அவர்களில் 250 சிறப்பு தேவையுடைய பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.